அருகே நெருங்க முடியாதளவிற்குத் தூக்கியடிக்கும் துர்நாற்றம். அந்த நகரத்தின் முழுக் குப்பை களும் அங்கேதான் கொட்டப்படுகின்றன. சில மணித் துளிகள் அப்பகுதியில் நின்றாலேயே தொற்று நோய்க்கு ஆளாகிவிடுவோமோ என்று அஞ்சி நடுங்கவைக்குமளவிற்குப் பயங்கரமான சூழல். அதற்கு மத்தியில் வெய்யில் மழை எதற்கும் ஈடுகொடுக்க முடியாததொரு குடிசை, அதற்குள் ஒரு வாழ்க்கை. கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
மனிதர்களால் நினைத்தே பார்க்க முடியாத அந்தச் சூழலுக்குள்தான் இந்த உலகத்தால் கைவிடப்பட்ட மக்கள் கூட்டத்தினரில் ஒரு பகுதியினர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தம்மைச் சூழ்ந்துள்ள பயங்கரங்களில் எதைப்பற்றிய பிரக்ஞையும் இன்றி, குண்டுச் சத்தங்களும் இராணுவக் கொடுமை களும் அற்ற ஒரு வாழக்கை மட்டுமே வேண்டும் என்பதற்காக இந்தக் குப்பை மேட்டுக்கு நடுவே அவர்களது வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. கந்தகநெடியிலிருந்து தப்பி வந்து அதைவிடக் கோரமான நெடிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த மக்களை எவரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
மியன்மார் என்று இப்போது அழைக்கப்படும் பர்மாவின் ஒரு இனப் பிரிவினர் எல்லை தாண்டி வந்து தாய்லாந்தில் படும் துயரத்தின் சிறு உதாரணம்தான் இது.

தனித்துவ அடையாளங்களைக் கொண்ட பல இனங்கள் வாழும் ஒரு நாடு பர்மா. ஆளும் அதிகார வர்க்கமாக இருக்கும் பேர்மியர்கள் அங்கு பிரதான இனத்தவர்கள். அதேசமயம் கச்சின் (Kachin), ஷான் (Shan), கரேனி அல்லது கயா (Karenni- Kayah), கரேன் (Karen), சின் (Chin), அரகன் அல்லது ரகைங் (Arakan – Rakhaing) மற்றும் மொன் (Mon) ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர்.
பொதுவாக மிலேச்சத்தனமான இராணுவ அரசு என்று சமாதான ஆர்வலர்கள் அனைவராலும் குறிப்பிடப்படும் ஆட்சியே இன்று பர்மாவில் நடக்கிறது. அவர்களுக்கு எதிராக ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போராடிவரும், நோபல் சமாதானப் பரிசு பெற்றவரான ஆங்சான் சூகி, தொடாந்து நீண்ட காலமாகப் போராடிக்கொண்டே இருக்கின்றார். இராணுவ அரசு அவரை நசுக்கிவிட தன் னால் இயன்ற அனைத்தையும் செய்துகொண்டே இருக்கின்றது. ஆனாலும் அதிகார பூட்ஸ்களை மீறி அவர் வாழ்ந்து கொண்டும் தம் மக்களுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டும் இருக்கிறார்.
மியன்மார் அரசு தனது நாட்டில் ஜனநாயகத்தை மட்டும் நசுக்கிவிடவில்லை. சிறுபான்மை மக் களின் உரிமைகளையும்கூட தன் இராணுவ நலன்களுக்காக மறுக்கிறது. “அங்கே நாங்கள் மனிதர் களுக்குரிய சாதாரண அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில்தான் வாழ்கின்றோம்” – என்கிறார் தாய்லாந்தில் அகதியாக இருக்கும் ஒருவர்.
இராணுவங்கள் உலகில் எங்கும் ஒரே மாதிரியானவையாகத்தான் இருக்கின்றன. பர்மாவில் அதன் முழுப் பரிமாணத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள். கற்பழிப்புக்கள், கடத்தல்கள், விசாரணைகளற்ற கொலைகள் எல்லாமே சிறுபான்மையினத்தவர்களின் பிரதேசங்களில் தாராளம். இராணுவ அதிகாரி கள் குறுநில மன்னர்கள் போன்று செயற்படுமளவிற்கு அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமைகள் இருக் கின்றன என்று கூறப்படுகின்றது. அவர்கள் வைத்ததுதான் சட்டம், அவர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம். பெண்களைப் பலாத்காரப்படுத்தலாம், ஆண்களைப் பிடித்துச் செல்லலாம் கொல்லலாம் எதுவும் செய்யலாம். நீதி விசாரணைகளோ தண்டனைகளோ கிடையாது. (இன்றைய ஆட்சியில் இலங்கையின் நிலையும் இதை ஒத்தது போன்றுதானே இருக்கின்றது)

போதாக்குறைக்குப் பர்மாவின் பொருளாதரம் வேறு கீழ்நிலையில் இருக்கிறது. சிறுபான்மை இனத் தவர்களுக்கோ தொழில் செய்வதற்கான எந்த மார்க்கமும் இல்லை. விவசாயம்கூட மழையை நம்பி இல்லை இராணுவத்தை நம்பியே இருக்கின்றது. கதிர் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கின்ற போது, அவர்கள் விரும்பினால் முழு வயலுக்குமே தீ வைப்பார்கள் என்கிறார் கவலையுடன் ஒரு விவசாயி.
இந்த நிலைதான் லட்சக்கணக்கான மக்களை தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறி வெடி குண்டுச் சத்தங்களற்ற, இராணுவக் கெடுபிடிகளற்ற ஒரு மண்ணைத் தேடி ஒட வைக்கின்றது. அமைதியையும் நிம்மதியையும் மட்டும் எதிர்பார்த்தே அவர்கள் தாய்லாந்து மண்ணை மிதிக் கிறார்கள். அங்கே அவர்களுக்கு வேறு எதுவுமே கிடைப்பதில்லை. மிக மிக ஆபத்தான – கண்ணி வெடிகள் நிரம்பிய பகுதிகளைக் கடந்து – காடுகள் நிறைந்த மலைகளைத் தாண்டி எல்லையைக் கடக்கிறார்கள். இப்படி சுமார் 6 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தாய்லாந்திற்குள் தஞ்சமடைந்திருக் கிறார்கள் என்கிறார் எல்லைப் பகுதி நகரான மேசோடிலுள்ள (Mea sot) அகதிகளுக்கான ஐ.நா. தூதரக அதிகாரிகளுள் ஒருவரான குள் தொங்லிம் (Kul Thonglim)
பர்மாவில் இருந்து தாய்லாந்து வருபவர்களில் மூன்று விதமானவர்கள் இருக்கின்றார்கள். ஒரு பகுதியினர் அகதி அந்தஸ்துக் கோரி அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்கள். தாய்லாந்து அரசு இவர்களுக்கென மூன்று அகதி முகாம்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த முகாம்களுக்கு வெளியே எங்கும் இவர்கள் செல்ல முடியாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண் டாவது பகுதியினர் தொழில் அல்லது வருமானம் தேடி வருபவர்கள். இவர்கள் தம்மை அகதிகளா கப் பதிவு செய்துகொள்வதில்லை. அவ்வாறு பதிவு செய்துகொண்டால் வருமானம் தேடி வெளியே செல்லமுடியாது என்பதனால் அவர்கள் இவ்வாறு செய்வதில்லை. மூன்றாவது வகையினர் தாய் லாந்து எல்லையோரம் பர்மாவிற்குள்ளேயே காடுகளுக்குள் இருக்கும் உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்தோர்.
இவ்வாறு பல தரப்பட்டவர்கள் இருப்பதாலும் அவர்களும் ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருப்பதாலும் பர்மாவில் இருந்து தாய்லாந்திற்குள் வந்திருப்பவர்களின் சரியான எண்ணிக்கையைக் கணக்கிட முடியவில்லை என்கிறார் தொங்லிம். எனினும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பதியப்பட்ட அகதிகளாக இருக்கின்றார்கள். இவர்களில் 50 ஆயிரம் பேர் வரையிலா னோர் வசிக்கும் அகதி முகாம் – இது மெலான் முகாம் எனப்படுகின்றது, பர்மா – தாய் எல்லை யோரமே அமைக்கப்பட்டிருக்கின்றது. வெறும் மரங்களாலும் தேக்குபோன்ற ஒரு வகை மரத்தின் இலைகளைக் கொண்டு செய்யப்பட்ட கூரைகளாலும் அமைக்கப்பட்ட சிறு குடிசைகளில் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த முகாம்களைவிட்டு அவர்கள் வெளியே செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் பொலீஸா ரால் கைது செய்யப்படுவார்கள். மிகப் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை போன்று மலையடி வாரத்தில் அமைந்துள்ளது இந்த முகாம். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் நிய+ஸிலாந்து போன்ற நாடுகள் இந்த அகதிகளைத் தமது நாடுகளுக்கு அழைத்துக்கொள்ளத் தயாரென அறிவித் திருக்கின்ற போதும் அதில் இந்த மக்கள் நாட்டம் கொள்ளவில்லை. அவர்கள் தமது சொந்த இடங் களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றே கேட்கிறார்கள். சுமார் 10 ஆயிரம் பேர் வரையிலான அகதிகள் மட்டுமே வேறு நாடுகளுக்குச் செல்ல விண்ணப்பித்தள்ளனர் எனகிறார் தொங்லிம். கடந்த 8 ஆண்டுகளாக பர்மா அகதிகளுடன் பணியாற்றி வருபவர் இவர்.

பர்மா அகதிகளை விடவும் துன்பங்களைச் சுமந்து வாழ்பவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள். (Micrent) இவர்கள் தாய்லாந்து அரசினால் அங்கீகரிக்கப்படாத வர்க்கத்தைச் சேர்ந்தோர். பர்மாவில் செய்வதற்குத் தொழில் வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் வருமானம் தேடி எல்லை தாண்டும் இவர்கள் மே சோட் நகரில் உள்ள தொழில் நிலையங்களில் பணியாற்றுகின்றார்கள். முதலாளிகளால் இவர்கள் பெருமளவில் சுரண்டப்படுவதுடன் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத் தப்படுகின்றார்கள் என்கிறார் இவர்களுடன் பெருமளவில் பணியாற்றும் லோறி மௌன்ட். வரு மானம் தேடி மே சோட் நகரைக் கடக்கும் பர்மிய இளைஞர்களில் பலர் பாங்கொக் நகரில் பாலி யல் தொழிலில் ஈடுபடும் அவலமும் நடக்கின்றது. அதேசமயம் பர்மிய இளம் பெண்கள் பலர் எல்லையோர நகரங்களில் இருந்து பாலியல் வியாபாரத்திற்காக முகவர்களால் வேறு இடங் களுக்குக் கடத்தப்படும் பயங்கரங்களும் இடம்பெறுகின்றன. ‘வேல்ட் விஷன்’ நிறுவனமும் மற்றும் சில பொது அமைப்புக்களும் இந்த விடயத்தில் பணியாற்றி வருகின்றன.
அகதிகள் அல்லது சட்டவிரோதக் குடியேறிகளுக்கு சலுகைகளையோ பாதுகாப்பான வாழ்க்கை யையோ வழங்கிவிட்டால் அது பார்மாவில் இருந்து மேலும் பலரை தாய்லாந்துக்கு வரவழைத்து விடும் என்பதாலும் அதிகளவில் பர்மியர்கள் எல்லை கடப்பது அந்த நாட்டுடனான உறவுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும் என்றும் தாய்லாந்து அரசு கருதுவதனால் சட்டவிரோதக் குடியேறி கள் விடயத்தில் பாராமுகம் தொடர்கின்றது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின் நிலையும் இதேபோன்றே இருக்கின்றது. அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் அகதிகளுடன் மட்டுமே பணியாற்றுகின்றது. அது சட்டவிரோதக் குடியேறிகள் விடயத்தில் தலையிடுவதே இல்லை. மிகக் குறைந்தளவு அமைப்புக்களே அவர்களுடன் பணி யாற்றுகின்றன. அதில் மீசோ சுகாதார சிகிச்சை நிலையம் முக்கியமானது. டாக்டர் சிந்தியா என்ற பர்மியரே இதனைத் தலைமை தாங்கி நடத்துகிறார். இந்த நிலையமே சட்டவிரோதக் குடியேறி களுக்கு மிகப்பெரிய சேவையை வழங்கி வருகின்றது.
சட்டவிரோதக் குடியேறிகள் என்ற காரணத்தால் பர்மாவில் இருந்து வந்தவர்களுக்கு மே சோட் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறமுடியாத நிலைமை ஒன்று இருந்தது. ஏந்த அடிப்படை சுகாதார வசதியும் இன்றி அவலப்பட்ட இந்த மக்களின் துயர் துடைப்பதற்காக மீசோ கிளினிக் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அது ஒரு மாவட்ட வைத்தியசாலைக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு இலவசமாகப் பணியாற்றி வருகின்றது.
நாளாந்தம் சுமார் 200 பேர் வரையிலானோர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விசேட அம்சம் என்னவென்றால், இந்த வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவென வருவோர் சில சமயத் தில் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு பர்மாவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படும் ஆபத்து இருக்கின்றது என்பதனால், குடும்பமாகவே அவர்கள் கிளினிக்கிற்கு வருகின்றார்கள். அத்தனை பேரையும் வைத்து பராமரித்து உணவு கொடுத்து அளப்பரிய சேவையாற்றி வருகின்றது மீசோ கிளினிக். இத்தனைக்கும், இந்தக் கிளினி அரசின் எந்த அனுமதியும் இன்றி சட்டவிரோதமாகவே நடைபெறுகின்றது. “மே சோட்டைச் சுற்றி நிறைய சட்டவிரோதக் காரியங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவை அனைத்தும் மனிதாபிமான நோக்கோடு இடம்பெறுபவை” என்கிறார் டாக்டர் சிந்தியா.
சில அமைப்புக்கள் இவ்வாறு பல சேவைகளை ஆற்றி வருகின்றபோதும் எவரது கவனத்திற்கும் உட்படாமல் இருக்கும் ஒரு பகுதியினரின் சோகங்கள் சொல்லி மாளாதவை. அவர்களில் சிறு பகுதியினரின் நிலைமையையே கட்டுரையின் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
தாய்லாந்தில் தஞ்சமடைந்த பர்மியர்களில் பலர் சுமார் இரண்டு தசாப்தங்களாக அங்கேயே இருக் கின்றார்கள். அகதிகளாக அல்லது சட்டவிரோதக் குறியேறிகளாக இருக்கின்றார்கள். சிறுவர்களாக வந்த இவர்கள் இப்போது வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் முடித்திருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் எப்போதுமே பர்மா மண்ணை மிதித்ததில்லை அவர்களுக்கு பர்மாவில் எதுவுமே தெரி யாது ஆனாலும் அவர்களும் பர்மியர்கள் என்றே கூறப்படுகின்றார்கள்.
(இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இந்த வலைப் பதிவில் பார்க்கலாம்.)



