தேங்காய் எண்ணெய்யில் போயிங் விமானம் ஒன்று வெற்றிகரமாகத் தனது பரீட்சார்த்தப் பறப்பை முடித்தது. அண்மையில் ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்த சுற்றுச்சூழல் தொடர்பான செய்தி இது.
வேர்ஜினியா அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் (உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்று) இந்தப் பரீட்சார்த்தப் பறப்பை நடத்தியது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஒன்று லண்டனில் இருந்து பறந்தது. அதிக தூரமில்லாத ஆம்ஸ்ரடாம் விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
தேங்காய் எண்ணெய்யையும் பபாசு (babassu) என்ற மரத்தின் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்யையும் கலந்து அதனுடன் வழக்கமாக ஜம்போ ஜெட்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளையும் சேர்த்தது இந்த முயற்சி. இதன் வெற்றி காரணமாக இனிவரும் காலங்களில் விமானங்களில் உயிரிஎரிபொருளை (biofule) அதிகளவில் பயன்படுத்த முடியும் என்பது எதிர்பார்ப்பு. கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்து பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இதனை எதிர்ப்போரும் இருக்கிறார்கள். அது வேறு விடயம்.
இந்தச் செய்தியைப் படித்தபோது எனது நினைவுகள் ஒரு தசாப்தம் பின்னோக்கிப் பறந்தன. 1990 முதல் 1995 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் எரிபொருள் வருவது மிகமிகக் குறைவு. பொருளாதாரத் தடை கடுமையாக நடைமுறையில் இருந்தது. அதிலும் பெற்றோல் மருந்து போன்ற பாவனைக்கு மட்டுமே உரியது. மண்ணெண்ணெய்யோ யானை குதிரை விலை. அப்போதெல்லாம் நாங்கள் செய்தவை, இதேபோன்று தேங்காய் எண்ணெய் அல்லது மரக்கறி எண்ணெய்யை மண்ணெண்ணையுடன் கலந்து வாகனங்கள் ஓடியதுதான்.
ஸ்டார்ட் எடுப்பதற்கு மட்டும் இந்த எரிபொருள் கொஞ்சம் பிரச்சினை கொடுக்கும். அதற்காக நாங்கள் டின்னரையோ பெற்றோலையோ கொஞ்சமாக உபயோகித்தோம். ஒரு சூப்பிப் போதலுக்குள் அதை வைத்துக் கொண்டு ஸ்டார்ட்டின் போது மட்டும் வாகனத்தின் எஞ்சின் பகுதிக்குக் காட்டி (குதிரைக்கு காரட் கட்டியது போன்று) ஸ்டார்ட் செய்வோம். எரிபற்று நிலையைப் பெற்றதும் (அதற்கு மட்டும்தான் பெற்றோல் அல்லது டின்னர் தேவை) கலப்பு எரிபொருளிலேயே வண்டி ஓட ஆரம்பித்துவிடும்.
பெரிய சத்தமும் அதிக புகையும்தான் இதனால் ஏற்படும் பெரிய பிரச்சினைகளாக அப்போது எம்மால் இனங்காணப்பட்டன. 1995 வரைக்கும் இந்த நிலை தொடர்ந்தது. (இதை மிகப் பெரிய அவல நிலை என்று நாங்கள் அப்போது நினைத்தோம் என்பது வேறு விடயம்) அதன் பின்னர் பெற்றோல் கிடைக்க ஆரம்பித்ததும் இதையெல்லாம் கைவிட்டு நாங்கள் மறுபடி கரியமில வாயுவை உற்பத்தி செய்யும் எங்கள் பொன்னான பணிக்குத் திரும்பி விட்டோம். இப்போதும் அதைத் தொடர்ந்தபடிதான் எம் பயணம்.
அந்த 5 வருட காலப்பகுதியில் தேங்காய் எண்ணையில் வாகனங்கள் (குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள்) ஓடியபோது அவை கக்கிய புகை கண்டு இவற்றால் சூழலுக்குப் பெரும் கேடு என்றுதான் எல்லோருமே நினைத்தோம். அப்போதெல்லாம் இது சுற்றுச் சூழலுக்குப் பயனள்ளது, கரியமில வாயுவின் தாக்கத்தை குறைக்கும் நல்ல செயல் என்று எங்களுக்குச் சொல்லித்தர யாரும் இருக்கவில்லை. நாட்டுக்கும் பூமிக்கும் ஏதோ கெடுதல் செய்வதாக நினைத்துக் கொண்டிருந்ததால் 1995இல் அந்தப் வெற்றிகரமான பரீட்சார்த்தங்களை எல்லாம் விட்டுவிட்டு நாங்கள் மறுபடி பெற்றோலுக்குப் போய்விட்டோம்.
இப்போது 13 வருடங்கள் கழிந்து, அதே தேங்காய் எண்ணெய்யிலும் மரக்கறி எண்ணெய்யிலும் விமானங்கள் பறக்கின்றன. அது சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது என்கிறார்கள். பெற்றொலுக்கும் சுப்பர் பெற்றோலுக்கும் ஒரு மாற்று என்கிறார்கள். உயிரி எரிபொருள் என்கிறார்கள்.
…….நாங்கள் செய்தவைகளையும் செய்து கொண்டிருப்பவைகளையும் நினைக்க எங்கே போய் தலையை முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை எனக்கு. போர் வெறுமனே அழிவுகளை மட்டுமல்ல நல்ல சில (கவனமாகப் படியுங்கள் சில) விடயங்களையும் எங்களுக்குக் கற்றுத்தந்தது. நாம் அவற்றைக்கூட இழந்து விட்டோமோ…..?




