காமதேனுக்களும் அனுமார்களும் எம்முடன் கூடவே கூடிக் கூலாவி குதூகலித்திருக்கும் ஒரு காலம் விரைவில் வந்துவிடும். மனிதத் திசுக்களையும் விலங்கின் கருமுட்டையையும் சேர்த்து கலப்புக் கரு ஒன்றை உருவாக்கி விட்டிருக்கிறார்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். அதுதான் என்னை இதிகாசகாலத்திற்கு இழுத்துச் சென்று மனித்தலை மிருக உடம்பு அல்லது மிருகத்தலை மனித உடம்பு ‘மிருமனிதர்களுடன்’ உலாவவிட்டது.
மனிதத் தோலில் இருந்து பிரித்தெடுத்த மரபணுக்களை, பசுமாட்டில் இருந்து எடுத்த முட்டைக்குள் வெற்றிகரமாகப் பதியம் வைத்ததில் புதிய கரு உருவாக்கியிருக்கிறது. ஆனால் இதை வளரவைத்து மனிதனாகவோ மாடாகவோ அல்லது இரண்டும் கலந்த ஒன்றாகவோ இப்போதைக்கு ஆக்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அந்தமாதிரி ஆராய்ச்சிக்கு எல்லாம் பிரிட்டனில் இன்னும் அனுமதி இல்லை. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அது பற்றிய பிரேரணை மீது காரசாரமான விவாதம் நடக்கிறது. மதவாதிகளும் அடிப்படைவாதிகளும் இத்தகைய ஆராய்சிகளுக்கு எதிராக நெருப்பெடுக்கிறார்கள். நிறைவேறினால் நல்லது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
எந்த எதிர்ப்பு இருந்தபோதும், இந்த ஆராய்ச்சி மருத்துவ ரீதியில் பயனுள்ளது என்கிறார் டாக்டர் லைல் ஆம்ஸ்ரோங். நியூகாஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவுக்கு தலைமை தாங்குபவர் இவர்தான். கலங்கள் (மனித உடல் கோடானுகோடி கலங்களால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது) எப்படி வளர்கின்றன அல்லது மேம்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி மிக உதவியானது என்பது அவரது வாதம். ஆராய்ச்சியின் வெற்றிகரமான முன்னேற்றம், பக்கவாதம் போன்ற நோய்களுக்கான புதிய சிகிச்சைகளை வெளிகொண்டுவரும் என்றும் அவர் நம்புகிறார்.
சரி! அதுக்கு மனித முட்டையை வைத்து ஆராய வேண்டியதுதானே எதுக்கு மாட்டு முட்டைக்குத் தாவுகிறார்கள்? எனக் கேட்பவர்களுக்காகவே, “மாட்டு முட்டைதான் இலகுவாகக் கிடைக்கிறது மனித முட்டை எங்கே கிடைக்கிறது?” என்று வாய்நுனியில் தயாராயிருக்கும் வார்த்தைகளை உமிழ்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எதையோ செய்து புதிய ‘மாட்டு மனிதர்கள்’ உருவானால் சரிதான் என்கிறீர்களா? அதுவும் நல்லதுதான்!
ஒரு சின்னச் சந்தேகம்! இந்த மாதிரி ஆராய்ச்சிகளால் ஒரு புதிய கலப்பு மனித இனம் (அதை மனித இனம் என்று சொல்லலாமா? இப்போதைக்கு அப்படிச் சொல்லிக் கொள்வோம்) உருவானதன் பின்னர், மனிதனுக்கும் அந்த இனத்திற்கும் இடையில் கசமுசா ஆகி உருவாகும் ‘பிறப்புக்களை’ எப்படி அழைப்பது? ஆணா பெண்ணா என்று தெரியாத திருநங்கைகளுக்கே இன்னும் ஒரு வழியையும் காணோம் அதற்குள் இது வேறயா என்கிறீர்களா?
இனிமே கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை எல்லாம் இல்லை, மனிதன் பாதி மிருகம் மீதி பிசைந்து செய்த கலவைதான்.




Its an interesting news. Keep writing. All the best.