இந்த வார குமுதம் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் பேட்டி வெளிவந்துள்ளது. ஒரு கேள்விக்கான பதிலில், “பிரியங்கா எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் மனிதாபிமான நோக்கோடு சென்று பார்த்திருக்கிறார் என கருதுகிறேன்” எனச் சொல்லி இருக்கிறார் அவர். ஆனால், உண்மை அதுதானா?
பிரியங்காவின் சந்திப்பு மனிதாபிமான நோக்கம் மட்டுமே கொண்டதா? நளினி அவரது குழந்தையுடன் மீண்டும் சேரவேண்டும் என்று உண்மையில் பிரியங்கா விரும்புகிறாரா? தனது தந்தையைக் கொன்றார் என்று கூறப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தப் பெண் மீதும் அவரது குழந்தை மீதும் உண்மையிலேயே சோனியா குடும்பத்திற்கு அக்கறை உள்ளதா? எந்தப் பிரதியுபகாரமும் இல்லாமல் இந்த விடயத்தில் சோனியா குடும்பம் கரிசனை காட்டுகிறதா?
அனேகமான பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் ஆம் என்ற தொனியில்தான் இத்தனை கேள்விகளுக்கும் பத்திலளிக்கின்றன. ஆனால் உண்மை…! அது வேறுவிதமானது என்கிறார் மூத்த புலனாய்வுச் செய்தியாளர் ஒருவர். இதற்கு முன்னர் குறிப்பிடத்தக்களவு மனிதாபிமானச் சிந்தையுள்ள புலனாய்வுச் செய்திகளை வெளியிட்டவர் அவர்.
நக்ஸலைட் என்ற குற்றச்சாட்டில் விசாரணைக்காக கைது செய்து வழக்கம் போல் பொலீஸ் “விசாரித்ததில்” இறந்து போன ஒரு மாணவனைப் பற்றிய உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காக ஒரு நாள் தானாகவே சிறை சென்றவர் அவர். கொல்லப்பட்ட மாணவனின் நண்பனை அங்கே சந்தித்து உண்மையை வெளிக்கொண்டு வந்தவர். இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் அவர் அளிக்கும் பதில்… இல்லை என்பதாகும்.
பிரியங்கா – நளினி சந்திப்பிற்குப் பின் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நோக்கம் இருக்கிறது. நளினியின் கணவர் முருகன், ராஜீவ் காந்தி கொலை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். சிறையில் இருந்தபடி அவர் அதனை அனேகமாக முடித்துவிட்டார். வெளியீட்டுக்குத் தயார் நிலையில் இருக்கிறது அது. அந்தப் புத்தகம் வெளியே வந்தால் நிறைய உண்மைகள் வெளியே வரலாம். காங்கிரஸ்காரர்களின் பல தலைகள் உருளலாம். ஏற்கனவே சரிந்துவரும் காங்கிரஸ் தலைமையிலான அரசின் செல்வாக்கை இது மேலும் சரிக்கும். தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவைதானா என்று கட்சி சிந்தித்ததன் விளைவு, பிரியங்கா வேலூரில் சிறைக்கு செல்லவேண்டியதாயிற்று.
அங்கே நளினியும் பிரியங்காவும் வாய்வழி இணக்கம் ஒன்றுக்கும் வந்திருக்கிறார்கள். அது, முருகனின் புத்தகம் எக்காரணம் கொண்டும் வெளிவரக்கூடாது. அதற்கு நளினி உதவி புரிந்தால் உடனடியாக அவரை வெளியே கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர் அவரது மகளுடன் சேர்த்து வைக்கப்படுவார். சிறிது காலத்தின் பின்னர் முருகனை வெளியே கொண்டுவருவது பற்றியும் சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும்.
நளினி நீண்ட காலமாகத் தன் பிள்ளையைப் பிரிந்து இருக்கிறார். இயல்பு வாழ்வுக்குத் திரும்பி பிள்ளையுடன் வாழும் விருப்பம் அவரிடம் இருப்பது சகஜம். அதற்கான ஆவலும் அவரிடம் அதிகம் இருக்கிறது. சோனியா குடும்பம் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பிரியங்காவின் ஒப்பந்தத்தை நளினி ஏற்றுக்கொண்டு விட்டார்.
இப்படித்தான் சொல்கிறார் அந்தப் பத்திரிகையாளர். நளினி 14 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தைச் சிறையில் கழித்துவிட்டார். நன்னடத்தை அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் தண்டனைக் குறைப்பு நாட்கள், பொதுமன்னிப்பு காலம் இப்படிப் பலவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்தியச் சட்டப்படி அவர் குறைந்தது 2 வருடங்களுக்குப் ‘பரோலில்’ செல்ல முடியும். ஆனால் இதுவரை அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்படவில்லை. சில தடவைகள் அவர் அதற்கு விண்ணப்பித்த போதும் அது நடைபெறவில்லை. இப்போதும் அவ்வாறே அவர் தனது விடுதலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
பிரியங்கா – நளினி உடன்படிக்கை சாதகமான வகையில் செய்து கொள்ளப்பட்டிருந்தால் இந்தத் தடவை அவர் விடுதலையாவதற்கான சாத்தியங்கள் அதிகம் உண்டு என்கிறார் அந்தப் பத்திரிகையாளர். இந்த விவாகாரத்தில் முருகனும் இணக்கமான முடிவுக்கே வந்திருக்கிறார் என்பது அவரது தகவல்.
இது அவர் கூறும் உண்மை. அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆதாரமற நிரூபிக்கப்படவிலை. எனினும் அவை கொஞ்சம் சிந்திக்கத்தூண்டுகின்றன. இந்த விடயத்தில் சோனியா குடும்பத்தின் மனிதாபிமானப் பக்கத்தை மட்டுமே முதன்மைப்படுத்திக் காட்டுவதில் ஊடகங்கள் முனைப்புடன் செயற்பட்டன செயற்படுகின்றன.
உண்மை இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் வெளிவந்துதானே தீரும்.




